இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் ஆகிறாரா அபிஷேக் நாயர்?
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதோடு தனது ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து, இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நேற்று (ஜூலை 9) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கவுதம் கம்பீருக்கு கீழ் இயங்கும் பயிற்சியாளர் குழுவை நியமிக்க அவருக்கு பிசிசிஐ முழு அதிகாரம் அளித்ததாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் வீரராகவும் இருந்த அபிஷேக் நாயர் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் நாயர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள பாராஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரை நியமிக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது.