தென்காசி மாவட்டத்தில் பரவுகிறதா மர்ம காய்ச்சல்? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Telugu Post’
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பகிரப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது மிக முக்கியமானது என தெலுங்குபோஸ்ட் கருதியது.
சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குறிப்பாக வாட்ஸ்அப்,
யூடியூப், முகநூல் மற்றும் X போன்ற தளங்களில், "தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்" என்று தகவல்கள் பரவி வருகின்றன. சில பதிவுகளில், இந்த காய்ச்சல் டெங்கு அல்லது பிற வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு சார்பில் இந்த படிவினை ஆய்வு செய்தோம். முதலில் முக்கிய வார்த்தைகளை கூகுள் தேடல் பயன்படுத்தி தேடினோம். அப்போது மாலை மலர் செய்தித்தாளின் 2023ல் வெளியிட்ட தகவலின்படி, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவுவதால், அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தியை பார்க்க முடிந்தது
இதேபோல், தினத்தந்தி செய்தித்தாளில் பிப்ரவரி12,2025 அன்று வெளியிட்ட செய்தியில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 6 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், காய்ச்சல் அதிகரித்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள், குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள் "காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் சூழலின் போது அதிகரிக்கலாம். குழந்தைகளின் சுகாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்புவதற்கு முன், அதிகாரப்பூர்வ ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும்" என்று அறிவுறுத்துகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு, கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் அதிகாரப்பூர்வ இடங்களில் கூட பரப்பப்பட்டன. உதாரணமாக, The New Indian Express வெளியிட்ட செய்தியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக என கூறி, வெந்தயம் மற்றும் பூண்டு நீரைப் பருக வேண்டும் என்ற தவறான அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. பின்னர், மாவட்ட ஆட்சியர் இதனை நீக்க உத்தரவிட்டார். இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களை தவறான வழிகளில் கொண்டு செல்லக்கூடியது. எனவே, சமூக ஊடகங்களில் பெறப்படும் தகவல்களை பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்க்க வேண்டும்.
முடிவு :
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. எனவே, சமூக ஊடகங்களில் பெறப்படும் தகவல்களை பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.