#Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | “இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் குழந்தையின் முகத்தை முதல்முறையாக காட்டினார். தொடர்ந்து தன் யூடியூப் பக்கத்தில் மனைவியின் பிரசவ வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபானே வெட்டுகிறார்.
இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை சார்பாகவும் உத்தரவிடப்பட்டது.
மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார். தொடர்ந்து, மருத்துவம் பார்த்த சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ சில்ட்ரன்ஸ் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய ஆய்வக கூட திறப்பு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 22) காலை விமான நிலையம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆய்வக கட்டிடத்தை ஆய்வு செய்தார். பின்னர் இந்நிகழ்வில் பேசுகையில் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது,
“யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை மீரியதற்காகவும், அவரை பிரசவ அறையில் அனுமதித்த ரெயின்போ மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.