ஈரான் - ஜூலை 5ல் அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு!
ஈரானில் மசூத் பெஜேஷ்கியானுக்கும், சயீது ஜலீலிக்கும் இடையேயான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் விமான விபத்தில் உயிரிழந்தார். இவரின் இறப்பை தொடர்ந்து ஈரானின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்த முகமது மொக்பர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார். ஈரானின் அரசியலமைப்பு சட்டத்தின் படி அதிபர் இறப்பின் 50 நாட்களுக்கு பின் தேர்தல் நடைபெறும். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், ஈரான் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 39.93 சதவீத வாக்குகளே பதிவாகின.சனிக்கிழமை வெளியிடப்பட்ட அந்தத் தேர்தலின் முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 2.45 கோடி வாக்குகளில், சுயேச்சையாகப் போட்டியிட்ட சீர்திருத்தவாதியான மசூத் பெஜேஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) கிடைத்தன.
சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பழைமைவாதியான சயீது ஜலீலிக்கு 94 லட்சம் வாக்குகள் (40.38 சதவீதம்) கிடைத்தன. நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகெர் கலிபாஃபுக்கு 33 லட்சம் வாக்குகளும் ஷியா பிரிவு மதகுருவான முஸ்தபா பூர்மொஹமதிக்கு 2.06 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.
ஈரான் சட்டத்தின்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால் முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்கு இடையே 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடத்தப்படும்.
அதன்படி மசூத் பெஜேஷ்கியானுக்கும், சயீது ஜலீலிக்கும் இடையே இரண்டாவது சுற்று தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் வரலாற்றில் இதற்கு முன்னர் ஒரே ஒரு முறைதான் இரண்டாவது சுற்று அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானியை மஹ்மூத் அஹ்மதிநிஜாத் வென்றது நினைவுகூரத்தக்கது.