ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அரசு இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடிதான் இது. ஒரு பெரிய மோதலை நோக்கி இஸ்ரேல் முன்னேறுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதுதான் இந்த பதிலடியின் நோக்கம். இந்த நோக்கத்தை நாங்கள் அடைந்துவிட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் பதிலடி தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட போர் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் பதிலடி கொடுக்க விரும்புவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர், இருப்பினும் குழு அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான நேரம் மற்றும் அளவு குறைவு என்பதாகவும் ஆய்வு செய்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.