ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது! - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதில் தாக்குதலில் நேற்று (02.10.2024) இரவு ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நெதன்யாகு செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ”ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்ததாகவும், காஸா, லெபனானில் உள்ள பயங்கரவாதிகள் கற்றுக் கொண்ட வேதனையான பாடத்தை ஈரானும் விரைவில் கற்றுக் கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றி பெற்றதாகவும், தாங்கள் வீசிய 90 சதவிகித ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பைடன், இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க படைகளுக்கு பைடன் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.