ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க டிஜிட்டல் முறையை கையாளும் ஈரான் அரசு - ஐநா அறிக்கை!
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்கும் வகையில் ஈரான் அரசு ட்ரோன்களையும் ஊடுருவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் கையாளுகிறது என ஐநா-வின் 'சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன்' (Independent International Fact-Finding Mission on the Islamic Republic of Iran) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் டாக்ஸிகள் போன்ற தனியார் வாகனங்களில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாடு மீறல்களைப் பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி செயலிகளைப் பயன்படுத்த கோரி மக்களை ஊக்குவிக்க ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் “அரசு ஆதரவு விழிப்புணர்வு” என்ற உத்தியைப் பயன்படுத்துவதாக புலனாய்வாளர்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானிலும் தெற்கு ஈரானிலும் ஹிஜாப் கடைபிடித்தலை கண்காணிக்க ட்ரோன்கள் மற்றும் கேமராக்களின் பயன்பாடு பெண்கள் மற்றும் சிறுமிகளை மத்தியில் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய அங்கமாக "நாசர்" என்ற மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது என்றும், இது கட்டாய ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்கள் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்க இந்த செயலி உதவுவதாக சொல்லப்பட்டுள்ளது.
ஈரானின் “ஹிஜாப் மற்றும் கற்பு” சட்டம் குறித்து கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட பெரும் விவாதத்தால் கடந்தாண்டு இடைநிறுத்தப்பட்டது என்றாலும் கூட அது கடுமையான அச்சுறுத்தலாக இருந்தது என்றும் பாதுகாப்புப் படைகளுக்கு ஹிஜாப் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதோடு கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்று 'சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், “பூமியில் பாவம்” என்று குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகளை மீறியதாகக் மஹ்சா அமினி (22 ) என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான பரவலான போராட்டங்கள் வெடித்தை தொடர்ந்து சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.