ஐபிஎல் | டெல்லியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ரிக்கல்டன் பேட்டிங்கில் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
மறுமுனையில் ஆடிய ரிக்கல்டன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் கண்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நமன் திரும் அதிரடியாக ஆடினார். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 59 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் அடித்தது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மும்பை அணியின் நமன் திர் 38 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் ஜாக் பிரசர் மற்றும் அபிஷேக் போரேல் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் பிரசர் முதல் பந்திலே அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் அபிஷேக் போரலுடன், கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. இதில் கருண் நாயர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்சர் பட்டேல் 9 ரன்களிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும், கே.எல்.ராகுல் 15 ரன்களிலும், விப்ராஜ் நிகம் 14 ரன்களிலும், அசுதோஷ் சர்மா 17 ரன்களிலும், குல்தீப் யாதவ் 1 ரன்னிலும், மொகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் கரண் சர்மா 3 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.