ஐபிஎல் | இறுதி வரை போராடிய மும்பை... லக்னோ அணி திரில் வெற்றி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோவில் நேற்று (ஏப்.5) நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி அதிரடி காட்டியது. லக்னோ அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் ஜேக்ஸ் 5 ரன்களிலும், ரியான் ரிகெல்டான் 10 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய நமன் திர் 46 ரன்களிலும், சூர்ய குமார் யாதவ் 67 ரன்களிலும், திலக் வர்மா 25 ரன்களிலும் வெளியேறினர். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 12 ரன்கள் வித்தியாசத்தில் மூம்பையை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா 28 ரன்களுடனும், மிட்செல் சாண்ட்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.