#IPL2025 | மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுகிறார் தோனி?
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது. தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவராலும் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மகேந்திர சிங் தோனி, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புதான் தற்போது வரை நீடித்து வருகிறது. முன்னதாக, கடந்த மாதம் எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், 'Uncapped' வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : Phoenix வீழான் படத்தின் ‘யாரான்ட’ பாடல் வெளியீடு!
அதன்படி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகளாகும் வீரரை, Uncapped வீரராக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தோனியை (Uncapped player) ஆக தக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனியுடன் ஜடேஜா , ருத்ராஜ் கெய்குவாட், பத்திரானா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 31-ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சீசனில் மகேந்திர சிங் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு ரூ. 5 கோடியே கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த மெகா ஏலத்தில் Uncapped வீரர்களை தக்கவைக்க ரூ. 4 கோடி ஒதுக்க வேண்டும் என விதி இருந்த நிலையில், இந்தாண்டு அது மாற்றப்பட்டுள்ளது.