#IPLAuction2025 | முதன்முறையாக பதிவு செய்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்க இங்கிலாந்து முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பெயரை ரூ. 1.25 கோடி அடிப்படை விலையாக பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இந்த மாதம் 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக, இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும், பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 என வீரர்களை தக்க வைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : திருப்பதி தேவஸ்தானம் | 54வது அறங்காவலர் குழு தலைவராக பிஆர் நாயுடு பதவியேற்பு!
மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை தொகை ரூ.1.25 கோடிக்கு பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளூர் டி20 போட்டியில் கடைசியாக 2014ம் ஆண்டு விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.