ஐபிஎல் | பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி... குஜராத் அபார வெற்றி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய குஜராத் அணியின் வீரர்கள் ரன்களை குவித்தனர்.
இறுதியில் குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை அள்ளியது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். குஜராத் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 73 ரன்களை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.