ஐபிஎல் | ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆமதாபாத்தில் நேற்று (ஏப்.8) நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆடடத்துக்கான டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை வாரி குவித்தனர்.
குஜராத் அணி வீரர்களை வெளியேற்ற முடியாமல் ராஜஸ்தான் வீரர்கள் திணறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடீவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் குவித்தார். ராஜஸ்தானின் மகீஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே இருவரும் தலா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா இருவரும் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்ககளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூரலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்சமாக ஹெட்மயர் 42 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.