ஐபிஎல் | கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலிங் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - சாய் சுதர்சன் களமிறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் கண்ட பட்லரும் ரன்களை அள்ளினார். மறுமுனையில் ஆடிய சுப்மன் கில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த திவேட்டியா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இறுதியில் 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் பட்லர் 41 ரன்களுடனும், ஷாருக்கான் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
கொல்கத்தா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி குஐராத் அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 50 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.