ஐபிஎல் | வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி உள்ளூரில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியை சந்தித்தது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்த கொல்கத்தா அணி, ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் அபார வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அடுத்ததாக நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் போராடி தோற்றது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், 3வது வெற்றியை பதிவு செய்ய கொல்கத்தாவும் போராடும். இதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்று இருக்கின்றன.