IPL 2025 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் திடீர் விலகல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.
இதனால் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டேல் ஸ்டெயின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட வாய்ப்பளித்த அணி நிர்வாகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துரதிருஷ்டவசமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக என்னால் தொடர முடியாது. இருப்பினும், தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படுவேன். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை 3வது முறையாக கோப்பையை வெல்ல வைக்க முயற்சி செய்வோம்."
இவ்வாறு டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.