ஐபிஎல் 2025 | மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 22) தொடங்கியது. இந்த தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மும்பை அணி தரப்பில் திலக் வர்மா 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 4விக்கெட்டுகளும், கலீல் அகமது 3விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிபாதி களமிறங்கினர்.
இதில் ராகுல் திரிபாதி 2 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் பந்துகளை விளாசினார். சிறப்பாக ஆடி ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சிவம் துபே 9 ரன்களிலும், தீபக் ஹூடா 3 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
மறுபக்கம் ரச்சின் ரவீந்திரா ரன்களை குவித்துக்கொண்டிருந்தார். இறுதியில் சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளுக்கு 158 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றி பெற்றது. விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ் மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.