ஐபிஎல் 2024 - டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றது.
நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி நேற்று (மார்ச் 22) தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஹர்சல் படேலும், அர்ஷிதீப் சிங்கும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாபில் முதலில் களமிறங்கிய ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டத்தை தொடங்கினர். ஷிகர் தவான் 22 ரன்களில், இஷாந்த் சர்மா பவுலிங்கில் போல்டானார். அதே ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்களில் ரன் அவுட்டானார்.
போட்டியின் இறுதிக்கட்டத்தில் 18-வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டனும், சாம் கரனும் அடித்த சிக்சர்ஸ் பஞ்சாப் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. போட்டியின் இறுதியில் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் லியாம் லிவிங்ஸ்டன். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வெற்றிகொண்டது பஞ்சாப் அணி. லிவிங்ஸ்டன் 38 ரன்களுடனும், ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதிகபட்சமாக டெல்லி தரப்பில், குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.