ஐபிஎல் 2024 : பெங்களூர் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்!
ஐபிஎல் 2024 தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதையும் படியுங்கள் : “ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்” – வைகோ பேட்டி!
நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மும்பைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில், இரவு 7.30 மணியளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.