ஐபிஎல் 2024 : ரன்கள் குவிப்பதில் லக்னோ அணி தொய்வு - குஜராத் அணிக்கு 164ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய தினத்தின் 2வது போட்டியில் ரன்கள் குவிப்பதில் லக்னோ அணி தொய்வுடன் காணப்பட்டதால் குஜராத் அணிக்கு 164ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸும் மோதின. இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகின்றன.
இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்மூலம் குஜராத் அணி பௌலிங் செய்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் நான்கு புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் லக்னோ அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். குவியிண்டன் டி காக் சிக்ஸருடன் ரன் எண்ணிக்கையை துவங்க அடுத்த சில பந்துகளில் உமேஷ் யாதவில் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.
கே.எல்.ராகுல் மற்றும் மார்கஸ் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் இணைந்து நிதானமாக ஆடிய நிலையில் கே.எல்.ராஹுல் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மார்கஸும் அரைசதம் கடந்த நிலையில் 58ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் 35 ரன்களுக்குள்ளாக ஆட்டமிழந்து வெளியேற 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 5விக்கெட் இழப்பிற்கு 163ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் அணிக்கு 164ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.