ஐபிஎல் 2024 | புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது KKR அணி!
வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸை தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்தியதன் வாயிலாக KKR அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய கே கே ஆர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணியில் தொடக்க வீரர் பில் சால்ட், அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைன், 39 பந்துகளை எதிர் கொண்டு 81 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதனை அடுத்து ஆங்கிரீஸ் ரகுவான்ஷி 32 ரன்களும் ஆண்டிரு ரஸில் 12 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் எடுக்க இறுதியில் ரமந்திப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 416 என்ற அளவில் இருந்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இமாலய இலக்கை துரத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 9 ரன்களிலும், கேப்டன் கே எல் ராகுல் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க, தீபக் ஹூடா ஐந்து ரன்களில் வெளியேறினார்.
ஒரு புறம் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 36 ரன்கள் சேர்க்க மறுபுறம் நிக்கோலஸ் பூரான் 10 ரன்களிலும், ஆயுஸ் பதோனி 15 ரன்களிலும் ஆஸ்டன் டர்னர் 16 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் ஒருவர் கூட இரட்டை இலக்கம் ரன்களை தொடவில்லை.
அனைவரும் வந்த வேகத்தில் திரும்பியதால் லக்னோ அணி 16 .1 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
அதேபோல் ராஜஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும் கொல்கத்தா 11 போட்டிகளையும், ராஜஸ்தான் 10 போட்டிகளையும் வென்றுள்ளது. இன்று சன்ரைசர்ஸ் - மும்பை அணிகள் மோத உள்ள நிலையில், அந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் முதலிரண்டு இடங்களுக்கு பாதிப்பு இருக்காது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றால் 3வது இடத்திற்கு முன்னேறும். சிஎஸ்கே 4வது இடத்திற்கு தள்ளப்படும்.