For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு, முதலீட்டாளர் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

07:21 PM Jan 08, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு  முதலீட்டாளர் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்
Advertisement

திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 30000 மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்தனர்.

மாநாட்டின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாடு நிறைவு விழாவில் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, இங்கிலாந்து இணை அமைச்சர் லார்டு தாரிக் அகமது, அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில், இங்கிலாந்து மாநில அமைச்சர், லார்ட் தாரிக் அகமது, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, TAFE நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், செயின்ட் கோபேன் நிறுவனத்தின் ஆசியா பசிபிக் & இந்தியப் பகுதியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தானம், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, சிஐஐ தமிழ்நாடு தலைவர்  சங்கர் வாணவராயர், Pou Chen நிறுவனத்தின் துணைத் தலைவர், Qinxue Lee,
டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரவீர் சின்ஹா கலந்து கொண்டார்.

மேலும் உலக நிறுவனங்களின் தலைவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹமாடா சீஜி, JSW நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஜன் ஜிண்டால், ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் விட்மர், TEPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரந்தீர் தாக்கூர், TVS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வேணு சீனிவாசன்,  கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா கோத்ரேஜ், TVS சப்ளையின் செயல் தலைவர்/சிஐஐ தலைவர் ஆர்.தினேஷ், ஏபி மோல்லர் மேர்ஸ்கின் நிர்வாக இயக்குனர் ரெனே பைல் பெடர்சன், ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், ஹூண்டாய் (இந்தியா) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்சூ கிம், பெகாட்ரான் கார்ப் (இந்தியா) நிர்வாக இயக்குனர் சார்லஸ் லின், மிட்சுபிஷி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கசுஹிகோ தமுரா மற்றும் குவால்காம் இந்தியாவின் தலைவர் சவி சோயின் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி - இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து - என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் அமைச்சர் டிஆர்பி.ராஜா. தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை பாராட்டுகிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது. நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகள் திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன். இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் நிச்சயம் இது நினைவுகூரப்படும்! இந்த மாநாட்டினுடைய தனித்துவமும் புதுமைத்துவமும் என்றென்றும் பேசப்படும்! நான் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே ஒரு அன்புக்கட்டளை இட்டேன். உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கியக் காரணமாக அதுதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள். வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது. ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடுகளில், உற்பத்தித் துறையில், அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய் முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக 22 ஆயிரத்து 130 கோடி ரூபாய் முதலீடுகள், பெருந்தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 63 ஆயிரத்து 573 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 

சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த இலக்கை விரைவில் அடைந்திட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement