“முதலீடுகள் மழையாக பொழிகிறது - தமிழ்நாட்டிற்குப் போட்டியே வியட்நாம் மற்றும் மெக்சிகோ தான்” -அமைச்சர் #TRBRaja பெருமிதம்!
தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை பொழிகின்றன என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான 14 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதனிடையே, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்ற மாநில முதல்வர்கள் ஈர்த்த முதலீட்டைவிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறைந்த முதலீட்டையே கொண்டு வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்திற்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அவர், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் குறித்த வருடாந்தர மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதில் உற்பத்தி துறையில் பங்களிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன், வேலை வாய்ப்பு மூலதன உருவாக்கம் போன்றவற்றின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி (GVA) 7.3 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 21.97 லட்சம் கோடியாக (ரூ. 20.47 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது தொழில் ஆய்வு (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. ஏஎஸ்ஐ அறிக்கையின்படி, 2022-23க்கான தொழில்துறை உற்பத்தி 21 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) திங்கள்கிழமை வெளியிட்ட தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) 2022-23 இன் முடிவுகளின்படி, உற்பத்தித் துறையில் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ASI இன் படி, இந்தியா முழுவதும் 1,84,94,962 நபர்கள் தொழிற்சாலைகளில் பணி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக 15% வேலைவாய்ப்புகளை வழங்கி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாகவும், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலமாகவும் தமிழ்நாடு முதலிடம் வகிக்குகிறது.
இந்தியாவில் மொத்தமுள்ள சுமார் 2 லட்சத்து 53 ஆயிரம் தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக குஜராத்தில் 31ஆயிரம் தொழிற்சாலைகளும், மராட்டியத்தில் சுமார் 26 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தொழிற்சாலைகளில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களிலும் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 85 லட்சம் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டில் மட்டும் 15 விழுக்காடு அதாவது சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து உள்ள மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் சுமார் 23 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை பெய்கிறது:
இந்நிலையில், "இந்தியாவின் தொழில் மயமான மாநிலங்கள் மத்தியில் தமிழ்நாடு வியட்நாம் மற்றும் மெக்சிகோவுடன் போட்டியிடுகிறது. மிகப்பெரிய முதலீட்டில் கார்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி செய்யும் தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை பெய்கிறது." என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது X தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.