போதை காளான் பறிமுதல் வழக்கு - பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை... உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
போதை காளான் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய காலத்தில் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த மணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
கடந்த 17.8.2024 அன்று மேஜிக் காளான் (போதை காளான்) கடத்துவதாக போலீசாருக்கு
கிடைத்த தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது அந்த வழியாக
வந்த எனது காரை மறித்து சோதனை செய்ததில், 100 கிராம் மேஜிக் காளான்
இருந்ததாகவும் கூறி, கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து என்னை கைது செய்து
சிறையில் அடைத்துள்ளனர்.
எனது காரில் போதை காளான் இருந்தது தொடர்பாக எந்த தடய அறிவியல் சோதனையும் செய்யப்படவும் இல்லை. என் மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். என்னை சிறையில் அடைத்ததால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆண்டனி சந்தோஷ்,போதை காளான் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் வகுத்துள்ள உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. போதை தடுப்பு சட்டப்பிரிவு 14-இன் படி பறிமுதல் செய்யப்பட்ட போதை காளான் பரிசோதனை கூடத்திற்கும் அனுப்பி அறிக்கை பெறவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, “பொதுவாக ரசாயன பரிசோதனை அறிக்கை அதிகபட்சமாக 30 நாட்களில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் மனுதாரர் வழக்கில் இதுவரை ரசாயன பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக பின்பற்றுவது குறித்து பதில் அளிக்க, உள்துறை செயலாளர் (கூடுதல்), மற்றும் தடய அறிவியல் இயக்குநரை வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். மேலும் இது போன்ற வழக்குகளில் குறிப்பிட்ட கால கெடுவில் பரிசோதனை அறிக்கை வராவிட்டால், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம் என்றார்.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி குறிப்பிட்ட நாட்களுக்குள் ரசாயன பரிசோதனையை முடிக்கும்படி அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.