#InternationalDogDay | வரலாறும் முக்கியத்துவமும்...
நிபந்தனையற்ற அன்பும் தோழமையும் பொக்கிஷமாக கருதப்படும் உலகில், இந்த இரண்டும் கொண்ட செல்லப் பிராணிகளான நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்ற பட்டத்தைப் பெற்றதில் ஆச்சரியமில்லை.
நாய்களுக்கும் - மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் ஆழமான பாசத்தை போற்றும் வகையில் சர்வதேச நாய் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஹை ப்ரீட் நாய்களை காசு கொடுத்து வாங்கி வளர்ப்பதை விட, ஆதரவற்று இருக்கும் நாய்களையும் தத்தெடுத்து வளர்ப்பதை மக்களிடையே ஊக்குவிப்பதும் ஆகும். தவிர இனம், அளவு, பாலினம் அல்லது வயது உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து நாய்களின் நலனை உறுதி செய்வதும் இந்நாளின் முக்கிய நோக்கம்.
விலங்குகள் மீட்பு வழக்கறிஞர், நாய் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளரான Colleen Paige என்பவர் கடந்த 2004-ல் சர்வதேச நாய் தினத்தை அறிமுகப்படுத்தினார். இவர் ஆகஸ்ட் 26-ஆம் தேதி Sheltie என்ற 10 வயதான நாயை தத்தெடுத்ததன் நினைவாக குறிப்பிட்ட இந்த தேதியே சர்வதேச நாய் தினம் கொண்டாட தேர்வு செய்யப்பட்டது. பெட் ஷாப்-பில் நாய்களை வாங்கும் போது லாபமே முன்னிலையாக இருக்குமே தவிர, அவற்றின் நலன் இருக்காது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை வீட்டில் அடைக்கலம் கொடுப்பார்கள் என்ற ஏக்கத்தில் பல லட்சக்கணக்கான நாய்கள் இருப்பதால் நாய்களை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தெரு நாய்கள் என்றால் பலரும் புறக்கணிக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு சிலர் செய்யும் கொடுமைகள் அவ்வப்போது செய்திகளில் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய செய்கின்றன. தெருவில் வளரும் அல்லது வளர்த்து கைவிடப்பட்ட நாய்களுக்கு பாசம், சத்தான உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. எனவே இவற்றை தத்தெடுப்பது சிறந்த முடிவாக இருக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 2 கோடி தெருநாய்கள் உள்ளன. இவற்றில் சுமார் 10% மட்டுமே கிருமி நீக்கம் செய்யப்பட்டு நோய்த்தடுப்புச் செய்யப்பட்டுள்ளன. அதே போல நாட்டில் தேவைப்படும் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையோ சுமார் 1 லட்சத்திற்கும் மேல், ஆனால் சமீபத்திய தரவுகளின்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை 63,000 மட்டுமே.
நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு செய்வதில் கிராமப்புறங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு நகர்ப்புறங்களில் மட்டுமே செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. நாய்களின் சுகாதாரத்தை கணக்கில் கொள்ளும் போது கூடவே மனிதர்களுக்கு சேர்த்து மிக பெரிய ஆபத்தாக இருப்பது ரேபிஸ். ஏனென்றால் இதனால் ஆண்டுதோறும் சுமார் 50,000 பெருக்கும் மேல் மரணிக்கிறார்கள். நாய்களில் ரேபிஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி இயக்கம் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதை இந்த தரவு தெளிவுபடுத்துகிறது.
பள்ளிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் பல சமூகங்கள் மத்தியில் ஒரு நாய் அல்லது விலங்கு துன்பத்தில் இருப்பதை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தனிநபர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்பது விலங்கு நல ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை.