காஷ்மீரில் 7,000 பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தால் ஏரியில் யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. பண்டைய நடைமுறையான யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட யோகா தினத்தை ஐநா அங்கீகரித்தது. அந்த வகையில் 10வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டு, பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் தியான பூமியான ஜம்மு காஷ்மீரில் இன்று கூடியிருப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "யோகாவினால் உருவாகும் சூழல், சக்தி மற்றும் அனுபவத்தை ஜம்மு காஷ்மீரில் இன்று உணர முடிகிறது" என்று கூறினார். குடிமக்கள் அனைவருக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி செய்பவர்களுக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Post Yoga selfies in Srinagar! Unparalled vibrancy here, at the Dal Lake. pic.twitter.com/G9yxoLUkpX
— Narendra Modi (@narendramodi) June 21, 2024