Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச மகளிர் தினம் | அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

09:43 AM Mar 08, 2024 IST | Web Editor
Advertisement

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு:

அறிவியல்,  தொழில்நுட்பம், மருத்துவம்,  விண்வெளி,  விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்றும்,  பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் அதனை நாம் தான் தீர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: 

மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு,  நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.  முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம்,  மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தில் மகளிருக்கு 33 சதவீத விழுக்காடு இடஒதுக்கீடு,  இந்தியாவிலேயே முதல்முறையாக 1973-ல் காவல்துறையில் மகளிர் நியமனம் என்று கருணாநிதி ஆட்சிக் காலங்களில் மகளிரை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியல் மிக நீளமானவை.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்  ‘புதுமைப் பெண்’திட்டத்தையும் தொடங்கி,  கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு பிப்.21-ம் நாள், தமிழகத்தில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் ‘தமிழ்நாடு மாநிலமகளிர் கொள்கை 2024’-ஐ வெளி யிட்டோம்.

சமூகத்தின் சரிபாதியான பெண்கள், அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும்வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: 

இன்று மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு என்று ஒரு நூற்றாண்டுக்கு முன், பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத் தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது. பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்! பெண்மையை வணங்குவோம்! பெண்மையால் பெருமை கொள்வோம்! மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: 

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பாஜகஅரசோ மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி செயல்படுத்தாமல் கண் துடைப்புநாடகத்தை நடத்தி வருகிறது. பெண்கள் சமவாய்ப்பு பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: 

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரோடு, பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் வழியில் பெண்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: 

பெண்கள், சவாலை வாய்ப்பாக கருதி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும். குடும்பத்தினர் பெண் ணுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

வி.கே.சசிகலா: 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.தற்போது அரசை வழிநடத்து பவர்கள் பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: 

தடையில்லா கல்வி, பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள் போன்றவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது.

Tags :
| International Womens Day 2024international womens day'Women Empowermentwomens dayWomens Day 2024
Advertisement
Next Article