சர்வதேச மகளிர் தினம் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து !
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக குடியரசு தலைவர் செயலகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
"அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது.
நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர். எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம். சாதனை படைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.