"சென்னை ஐஐடி-யில் ரூ.30 கோடியில் சர்வதேச விளையாட்டு வளாகம்"- ஐஐடி இயக்குநர் காமகோடி
30 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சென்னை
ஐஐடியில் கட்டப்பட உள்ளதாக ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
Sports Excellence Admission-க்கான பிரத்தியேக இணையதள பிரிவை இன்று (பிப்.06) ஐஐடி
இயக்குநர் காமகோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை 2024-25
கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவர்களுக்காக Sports Analytics Center-ம் தொடங்கி உள்ளோம். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் விளையாட்டு துறையுடன் இணைந்து டெக்னாலஜியையும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
முதன்முறையாக ஒரு துறைக்கு 2 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தனியாக
ஸ்போர்ட்ஸ் ரேங்க் பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேசிய அளவில் தங்கம் வென்று இருந்தால் 35 மதிப்பெண்கள், வெள்ளி வென்று இருந்தால் 25 மதிப்பெண்கள், வெண்கலம் வென்று இருந்தால் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சர்வதேச அளவில் தங்கம் வென்றால் 100 மதிப்பெண், வெள்ளி வென்றால் 90 மதிப்பெண், வெண்கலம் வென்றால் 80 மதிப்பெண், பங்கெடுத்து இருந்தாலே 50 மதிப்பெண் வழங்கப்படும். தனியாக போட்டியிட்டு இருந்தாலும் சரி குழு விளையாட்டு போட்டியாக இருந்தாலும் சரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
முதற்கட்டமாக செஸ், கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட 13 விளையாட்டுக்கள்
இந்த கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த விளையாட்டுகள் தற்பொழுது ஐஐடி-யில் உள்ளது. அதனால் அவற்றை முதற்கட்டமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.
2 முதல் 4 ஆண்டுகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையும் படியுங்கள்: வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் பாதி பேர் அரசுப்பணி செய்யப்போகிறார்களா? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி
மொத்தம் 30 சீட்டுகள் BS data value course சேர்த்து 14 துறை படிப்புகளுக்கு
இது செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.30 கோடியில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சர்வதேச தரத்தில் சென்னை ஐஐடி-யில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கட்ட தொடங்குவோம். ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முழு கட்டணமும் விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல் இந்த ஆண்டும் தொடரும்.
அனைத்து போட்டிகளிலும் டெக்னாலஜி துணை இல்லை என்றால் உலக சாம்பியன் ஆக
முடியாது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக செஸ் விளையாட்டில் இது
நன்றாக தெரிகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஐஐடி ஸ்போர்ட்ஸ் சென்டர் ஆப் எக்சலன்ஸ் தலைவரும், முன்னாள்
மாணவருமான மகேஷ் கூறியதாவது:
"ஸ்போர்ட்ஸ், சயின்ஸ் அண்ட் அனாலிடிக்ஸ் சென்டர் 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம் .
விளையாட்டு துறைக்கு வேண்டிய ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ட்அப்ஸ் கொண்டு வருவது எண்ணம். அவர்கள் விளையாட்டு துறையிலும் சரி படிப்பிலும் சரி நல்ல முன்னேற்றம் பெற உதவும். இந்த முன்னெடுப்பு மூலம் விளையாட்டு டெக்னாலஜி மேம்படும் என்று நம்புகிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.