#MadrasIIT சர்வதேச மாநாடு | மாணவர்கள் பயனடைய கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்!
சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் BS (Bachelor Of Science) பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐஐடியில் இறுதி ஆண்டையும் மேற்படிப்பையும் படிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடா்பான 5 நாள் சா்வதேச மாநாடு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. ஐஐடி குவாண்டம் தகவல் தொலைத்தொடா்பு மற்றும் கணினி மையம் சாா்பில் நடைபெறும் இந்த மாநாட்டை தேசிய குவாண்டம் இயக்கத்தின் தலைவா் அஜய் செளத்ரி தொடங்கி வைத்தாா்.தொடர்ந்து இந்த மாநாட்டின் மூன்றாம் நாளில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் ரோபர் ஐஐடி இயக்குநர் ராஜீவ் அஹுஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஐ ஐ டி மெட்ராஸ் இயக்குநர் காம கோடி, “வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. ஐ ஐ டி மெட்ராசுக்கு வந்து படிக்க முடியாதவர்களுக்கு எப்படி கல்வியைக் கொடுக்கலாம் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட படிப்பு தான் B S Data Science. இந்த படிப்பு மூலம் வேலைவாய்ப்புகள் பல உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை கல்வியை எளிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இன்று இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
B S டேட்டா சயின்ஸ் படிப்பை ஐ ஐ டி மெட்ராஸில் படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் இங்கு படித்துவிட்டு 4 ஆம் ஆண்டு ஐ ஐ டி ரோபரில் செய்முறை கல்வியை கற்றுக் கொள்வார்கள். அதில் ஆராய்ச்சி செய்வார்கள். அதில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால், MS என்ற முதுநிலை படிப்புக்கு கேட் தேர்வு இல்லாமலேயே ஐ ஐ டி ரோபர் படிக்க வாய்ப்பளிக்கிறது.
அதேபோல், ஐ ஐ டி ரோபரில் படிக்கும் மாணவர்களும் ஐ ஐ டி யின் B S டேட்டா சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இது போன்ற பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பாக அமையும். இது முதல்முறையாக இரண்டு ஐஐடி நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி ரோபர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என அவர் தெரிவித்தார்.