உட்கட்சி மோதல்! முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி - உ.பி. அரசியலில் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பாஜக 33 இடங்களை மட்டுமே வென்றது. முந்தைய தேர்தலில் பாஜக 62 இடங்களை பிடித்திருந்தது. தேர்தல் முடிவுகள் எதிரொலியாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதலமைச்சர் மௌர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 14ம் தேதி லக்னோவில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மௌர்யா பேசுகையில், அரசை விட கட்சியே பெரியது. நான் முதலில் கட்சித் தொண்டர். அதன்பிறகே துணை முதலமைச்சர். அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சியினரை மதிக்க வேண்டும். கட்சியினர் யார் வேண்டுமானாலும் என்னை அணுகி கருத்து தெரிவிக்கலாம்" என தெரிவித்தார். இதற்குப் பதிலளித்து யோகி ஆதித்யநாத், ”அளவுக்கு அதிகமான நம்பிக்கை காரணமாகத்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டீலை, அவரது மாளிகையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.