சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக, சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், “மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு இடம் அளவீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடு தொகை விநியோகம் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கியது. ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை.
வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவையும் இதன் கீழ் வந்த நிலையில், இது தொடர்பாக முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இப்பகுதி மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி, நிலத்தை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
நிலம் கையகப்படுத்தப்படும் நபர்களுக்கு மாற்று இடமும், வீடும் ஏற்பாடு செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வலுக்கட்டாயமாக குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதிப்பதோடு, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு வசதிகளை முறையாக செய்து தரும் வரை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி மாலா முன்பாக அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில்,
“நிலத்தை கையகப்படுத்தும் போது மறுகுடியமர்வு செய்து தரப்பட வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்படுகிறது. தங்களது சொந்த நிலம், வீடுகளை அரசின் தேவைக்காக வழங்கும் இப்பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு நிச்சயம் செய்து தரப்பட வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதி, மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய விதிகளை பின்பற்றி, மக்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி, வழக்கு தொடர்பாக தமிழக நில கையகப்படுத்துதல் பிரிவின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.