நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.
வருமான வரி செலுத்துவோருக்கான சலுகைகள், வரிக் குறைப்பு உள்ளிட்ட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் ஆட்சி அமைக்கும் புதிய அரசு, 2024 - 2025ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்.9-ம் தேதி வரை நடைபெறுகிறது.