இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் - இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!
இடக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடராகும். மேலும் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரைக்கு பின்னர் கூட்டத்தொடர் தொடங்கும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இக்கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது உள்ளிட்ட முக்கியமான விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கே.சுரேஷ், பிரமோத் திவாரி, திமுகவின் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், சமாஜ்வாதியின் எஸ்.டி.ஹாசன், ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்குர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் ஜெயதேவ் கல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசியதாவது..
“ பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம், அதற்கு பிரதமர் மோடியின் பதில் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும். சட்டமியற்றுதல் தொடர்பான நடைமுறைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக அமைந்தது. ஒவ்வொரு பிரச்னை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
எம்பிக்கள் ரத்து செய்யப்பட்டதை நீக்க வலியுறுத்தி நான் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரிடம் பேசியிருக்கிறேன். அரசு சார்பாக அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இடைநீக்கம் ரத்து சபாநாயகர், மக்களவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட சிறப்புகுழுக்களைத் தொடர்பு கொண்டு இடைநீக்கக்கத்தை ரத்து செய்து அவர்கள் (எம்.பி.,க்கள்) அவைக்கு வர வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இருவரும் அதற்கு சம்மத்தித்துள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் நாளை கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இக்கூட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் கீழே குதித்து தங்கள் கைகளில் இருந்த குப்பிகள் மூலம் மஞ்சள் நிற புகைகளைப் பரப்பினர். நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரே கூட்டத்தொடரில் மொத்தமாக 146 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.