Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

10:21 AM Feb 01, 2024 IST | Jeni
Advertisement

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.  இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதையடுத்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற இவர், இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட் அறிக்கையில் வரி செலுத்துவோர் பல்வேறு எதிர்பார்ப்புகளை முன்வைத்துள்ளனர். அவை,

1. வரி அடுக்குகளில் முன்னேற்றம்

வரி செலுத்துவோரின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று வரி குறைப்பு.  பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், நிதிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

2. வரி தள்ளுபடி மற்றும் விலக்கு வரம்பு

கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  புதிய நேரடி வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் மதிப்பீட்டாளர்களுக்கு வருமான வரி தள்ளுபடிக்கான வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தினார்.  அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.  ஓய்வூதியத்திற்கு ரூ.15,000 விலக்கு அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  பழைய வரி முறை தற்போது சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.50,000 நிலையான விலக்கு அளித்து வருகிறது.

3. மூலதன ஆதாய வரிகள்

தற்போது பங்கு,  கடன் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு வகையான சொத்துக்களுக்கு மத்திய அரசு வெவ்வேறு வரி விதிப்பு அடுக்குகளை நிர்ணயித்துள்ளது. கால அளவைப் பொறுத்து,  சொத்துக்கள் குறுகிய கால அல்லது நீண்டகால என வகைப்படுத்தப்படுகின்றன.  இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் மூலதன ஆதாய வரி முறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

4. புதிய வரி முறை

கடந்த முறை வரி அடுக்குகளில் மாற்றம்,  சலுகை வரி விகிதங்களுடன் புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  2023 பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிகளை எளிதாக்கும் முயற்சியில் வருமான வரி அடுக்குகள் 7-ல் இருந்து 6-ஆக குறைக்கப்பட்டது.  இந்த முறையும்,  புதிய வரி விதிப்பின் கீழ் கூடுதல் பலன்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர்.

5. புதிய வரி விதிப்பின் கீழ் NPS விலக்கு விரிவாக்கம்

புதிய வரி விதிப்பின்படி தேசிய ஓய்வூதிய முறையின்(NPS) கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.50,000 விலக்கு,  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அகற்றப்பட்டது.  இதனை மீண்டும் இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் கொண்டுவர வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.  மேலும், இந்த வரம்பு 1,00,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

6. இன்சூரன்ஸ் பாலிசிகளில் இருந்து ஜிஎஸ்டி நீக்கம்

தற்போதைய 18% ஜிஎஸ்டி விகிதத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  காப்பீட்டுக் கொள்கைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பார் என்றும் எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.  இது காப்பீட்டு பிரீமியங்களைக் குறைக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
#NirmalasitaramanBudgetBudget2024governmentInterimBudgettaxTaxPayers
Advertisement
Next Article