சவுக்கு சங்கருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் இடைக்கால ஜாமின்!
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதை எதிர்த்து சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதித்துறை குறித்து எதுவும் தவறாக பேச மாட்டேன் என உறுதிமொழி அளிக்க தயாராக இருக்கிறேன் என சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நாங்கள் ஏன் அவ்வாறு உறுதிமொழி தரச் சொல்லப் போகிறோம்? எங்களை பொறுத்தவரை உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் பேசக் கூடாது என்பதுதான் மிகவும் முக்கியமானது,' எனத் தெரிவித்தனர். பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் இருந்து சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். அதேபோல இடைக்காலப் பிணை என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே எனவும், மேலும் வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பிணை பொருந்தாது எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.