அமெரிக்காவில் படிக்க விருப்பமா? - இலவச நேரடி ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்!
அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் இலவச நேரடி ஆலோசனைகளை பெற, சென்னை அண்ணா நூலகத்தில் அமெரிக்க பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கண்காட்சியை எஜுகேஷன் யுஎஸ்ஏ நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். அதற்கான இணைப்பு இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நீண்ட கால ஒத்துழைப்பு நிலவி வரும் நிலையில், குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி முதல் பட்டதாரி மற்றும் முதுநிலை மாணவர்களின் கல்வி பயணங்களை ஊக்குவிப்பது வரை பல்வேறு முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்த தொடரும் ஒத்துழைப்பு தற்போது "ஸ்டெம் என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கான கல்வி உதவி திட்டத்துடன்" விரிவடைகிறது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் குப்தா-கிளின்ஸ்கி இந்தியா அமைப்பு மற்றும் அமெரிக்க-இந்திய பெண்கள் பொருளாதார மேம்பாட்டு கூட்டமைப்பு இடையேயான ஒத்துழைப்புடன் இத்திட்டம் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள தொடக்க நிலை பெண் அறிவியலாளர்களையும் ஆராய்ச்சி வல்லுநர்களையும் ஸ்டெம் துறைகளில் தலைவர்களாக மாற உதவுவதே இதன் நோக்கமாகும்.
கல்வி முதலீடுகள் குறிப்பிடத்தக்க பலன்களை தந்து வருகின்றன. இன்று வெளியிடப்பட்ட ஓப்பன் டோர்ஸ் அறிக்கையை குறிப்பிட்டு பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, 2009-க்கு பிறகு, 2023-2024 ஆண்டில் மற்ற அனைத்து நாடுகளை விட அதிகளவில் மாணவர்களை இந்தியா அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளதாக அறிவித்தார். 2023-2024 ஆண்டில், 330,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றனர், இது முந்தைய ஆண்டை விட 23% உயர்ந்துள்ளது.
பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி உள்ளதாக ஓப்பன் டோர்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
முதுநிலை கல்வி சேர்க்கை: இரண்டாவது ஆண்டாக, சர்வதேச பட்டதாரி மாணவர்களின் அதிகளவில் அனுப்பி இந்தியா அதன் இடத்தை தக்கவைத்துள்ளது. 197,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுள்ள நிலையில், கடந்தாண்டை விட இது 19 சதவீத உயர்வு ஆகும்.
விருப்ப செயல்முறை பயிற்சி: விருப்ப செயல்முறை பயிற்சி படிப்புளில் 41% உயர்வுடன் 97,556 மாணவர்களை இந்தியா அனுப்பியுள்ளது. திறமையான தொழில்முறை நிபுணர்களை அமெரிக்காவுக்கு வழங்குவதில் இந்தியா முதன்மையாக உள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
இளநிலை சேர்க்கை: கடந்த ஆண்டை விட 13% உயர்வுடன் 36,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளநிலை மாணவர்களை அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
அமெரிக்க உயர்கல்வி மற்றும் பணி வாய்ப்புகள் மீது இந்தியாவில் அதிகரித்து வரும் ஆர்வத்தை இந்த எண்ணிக்கை பறைசாற்றுகிறது.
மற்றுமொரு முக்கிய அம்சமாக, அமெரிக்க மாணவர்கள் தங்கள் மேற்படிப்பிற்காக இந்தியாவை தேர்ந்தெடுப்பது 300% என்ற பெரும் உயர்வை எட்டியுள்ளது என இந்த வருடத்தின் ஓப்பன் டோர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 300ல் இருந்து 1,300 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச கல்வி வாரத்தின் தொடக்கத்தின் போது வெளியிடப்படும் ஓப்பன் டோர்ஸ் அறிக்கை, உலகளாவிய கல்வி மற்றும் பரிமாற்றத்தின் நன்மைகளை கொண்டாடுகிறது.
ஸ்டெம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய தூதர் எரிக் கார்செட்டி, "அமெரிக்க-இந்திய பெண்கள் பொருளாதார மேம்பாட்டு கூட்டமைப்பின் முன்னெடுப்பான ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் குப்தா-கிளின்ஸ்கி இந்தியா அமைப்பின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டெம் இந்தியா திட்டத்தை தொடங்க நாம் இங்கு இணைந்துள்ளோம். இந்த நிகழ்வு, உலகளாவிய கல்வி, ஒத்துழைப்பு மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் எதிர்காலத்தை வடிவமைக்க இது உதவும். சர்வதேச கல்வி வாரத்துடன் இணைந்து ஸ்டெம் பெண்கள் திட்டம் தொடங்கப்பட்டது இந்த தருணத்தை அர்த்தமுள்ளதாகவும் மேலும் சிறப்பானதாகவும் ஆக்குகிறது. கல்வி என்பது எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல, நமது நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பே உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதற்கு முக்கியமானது என்ற பகிரப்பட்ட நம்பிக்கையின் கொண்டாட்டத்தை இன்றைய நிகழ்ச்சி குறிக்கிறது," என்றார்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தலைவர் ரொனால்ட் ஜி. டேனியல்ஸ் கூறியதாவது: “ஸ்டெம் துறைகளில் பெண்களை ஆற்றலுடன் முன்னேற்றுவது உலகளாவிய புதுமை வளர்ச்சிக்கு முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம். அமெரிக்க அரசின் வெளியுறவு துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பெண்களுக்கான ஸ்டெம் திட்டம், இந்திய பெண் அறிவியலாளர்கள் முக்கியமான ஆராய்ச்சி திறன்களைப் பெறுவதற்கும், மேம்பட்ட வழிகாட்டுதல்களுடன் உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள தடைகளை உடைக்கும் வகையில், அவர்களின் ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்கும் தேவையான ஆதரவு, பயிற்சி மற்றும் வளங்களை இத்திட்டம் வழங்குகிறது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலியலுக்கு தலைமை வகிக்கும் திறமை வாய்ந்த பெண்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்," என்றார்.
பணியாளர்கள் மற்றும் முறையான பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், ஆரம்ப கல்வி வரை வேலைவாய்ப்புகள் வரையிலான அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையேயான ஒத்துழைப்பை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கொண்டாடுகிறது.
மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் டென்வர் பல்கலைக்கழகம் இணைந்து "சர்வதேசமயமாக்கல்: அமெரிக்க-இந்திய உயர் கல்வி நிறுவன ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை எளிமையாக்குதல் குறித்த இலவச டிஜிட்டல் வழிகாட்டி"யை வெளியிடுகின்றன. அமெரிக்க கல்வி முறை, அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் கூட்டு சேர்ந்து உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேசமயமாக்குவதற்கான ஆதாரங்கள், வெற்றிகரமான ஒத்துழைப்புக்கான சிறந்த நடைமுறைகள், ஆட்சேர்ப்பில் சமத்துவம், பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு வகையான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வழிகள் பற்றிய தகவல்களை இந்த வழிகாட்டி இந்திய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும். ஆசிரியப் பரிமாற்றங்கள், பாடத்திட்ட மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தரவுப் பகிர்வு மற்றும் பல தகவல்களும் இதில் அடங்கி இருக்கும்.
சர்வேதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை (USAID), சர்வதேச கல்வி வாரத்தை, Learn Play Grow என்ற புதிய திட்டத்தின் தொடக்கத்துடன் கொண்டாடுகிறது. சீஸெம் வொர்க்ஷாப் இந்தியா உடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம், ராஜஸ்தானின் பரன் மற்றும் தெலங்கானாவின் பூபாலப்பள்ளி மாவட்டங்களில் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் அடிப்படை கல்வி மற்றும் பாதுகாப்பான சுகாதார பழக்கங்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நேரடியாக 20,000 - 25,000 குழந்தைகளை அங்கன்வாடி மையங்கள் மூலம் சென்றடைந்து, 7.6 மில்லியன் மக்களை சமூக ஊடகங்கள் வழியாக அடையும். இந்தியாவில் தரமான ஆரம்பக் கல்வி தொடர்பான அமெரிக்க அரசின் நீண்ட கால உறுதியை இந்த நடவடிக்கை ஊக்குவிக்கிறது. இந்திய அரசின் நிபுண் பாரத் திட்டத்துடன் இது ஆதரிக்கிறது.
அமெரிக்க அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும் எஜுகேஷன் யுஎஸ்ஏ திட்டம், இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு, அமெரிக்க உயர் கல்விக்கான அணுகலை ஊக்குவிக்கிறது. பல்வேறு முன்னெடுப்புகளை இத்திட்டம் மேற்கொள்வதோடு, எண்ணற்ற வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட எஜுகேஷன் யுஎஸ்ஏ இந்தியா இணையதளம் (educationusa.in), இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கும் வாய்ப்புகளை ஆராய்வதற்கான செயல்முறையை எளிதாக்க உதவும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்ளது.
எஜுகேஷன் யுஎஸ்ஏ இந்தியா செயலியை மாணவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து, கல்லூரி விண்ணப்ப செயல்முறை பற்றிய சமீபத்திய தகவல்களைப் பெற முடியும். அமெரிக்காவில் உயர் கல்வியை திட்டமிடுவதற்கான எளிமையான மற்றும் விரைவான முதல் படியாக இது அமைகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில், எஜுகேஷன் யுஎஸ்ஏ சென்னை மற்றும் அமெரிக்க மையம் இணைந்து செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கதைசொல்லல் மற்றும் நாடகம் மூலம் அறிவியலைக் கற்பித்தல் உள்ளிட்டவற்றில் மாணவர்களை மையமாகக் கொண்ட நிகழ்வுகளை நடத்துகின்றன. மேலும் நவம்பர் 23, சனிக்கிழமை, பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமெரிக்க பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கண்காட்சியை எஜுகேஷன் யுஎஸ்ஏ நடத்துகிறது. அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள், 13 அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களுடன் இலவச நேரடி ஆலோசனைகளை பெற முடியும். நுழைவு இலவசம். கண்காட்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் https://bit.ly/EdUSA-AlumniFair-Nov23 என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.