தீவிரமடையும் போர்... தெற்கு லெபனான் மக்கள் வெளியேறுமாறு #Israel எச்சரிக்கை!
தெற்கு லெபனானில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் 2006 போருக்குப் பிறகு ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட இடையக மண்டலத்திற்கு வடக்கில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் மூலம், லெபனானின் தெற்கு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.