For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீவிரமெடுக்கும் #NipahVirus பரவல்... தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை!

09:14 PM Sep 20, 2024 IST | Web Editor
தீவிரமெடுக்கும்  nipahvirus பரவல்    தமிழக   கேரள எல்லையில் தீவிர சோதனை
Advertisement

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக - கேரள எல்லையில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் மலப்புரம் பகுதியில் 24 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொருவருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் - கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது. அந்த வகையில், கோவை - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், முள்ளி, மீனாட்சிபுரம், மேல்பாவி,  கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து அரசு மற்றும்  தனியார்  மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மருத்துவ குழுவினர் தீவிர மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Tags :
Advertisement