தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுகோட்டை மாவட்டத்தில் 202 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும், இன்று வரை (நவ.30) 214 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தினந்தோறும் இரண்டு முதல் மூன்று நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஃபீவர் வார்டு தொடங்கப்பட்டு சிகிச்சை
அளித்து வரப்படுவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.