மணிப்பூரில் குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர் தாக்குதல் - வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!
மணிப்பூரில் குண்டுக்களை வீசி கிளர்ச்சியாளர் தாக்குதல் நடத்தினர், நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் வன்முறை சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சிகளால் அங்கு படிப்படியாக அமைதி திரும்பி வரும் நிலையில், அவ்வப்போது சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், காங்போக்வி மாவட்டத்தின் மலைகளில் பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள், அதற்கு கீழுள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தின் கடாங்பாண்டு கிராமத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கிராமத்தினர், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தாக்குதலில், எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. அந்த கிராமத்தின் குடிசை வீடுகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.