மண்டல, மகர விளக்கு பூஜைகள் - சபரிமலையில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
சபரிமலையில் மண்டல பூஜை , மகர விளக்கு பூஜை தொடங்க உள்ள நிலையில் பம்பா நதி முதல் சன்னிதானம் வரை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஷிபு ஆய்வு செய்தார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஷிபு பம்பையில் உள்ள பம்பா நதி மற்றும் மருத்துவமனைகள் தீயணைப்பு துறை, என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பூஜைக்கான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும் சன்னிதானத்தில் உள்ள அரவணை அப்பம் தயார் செய்யும் இடம், பெய்லி பாலம், பக்தர்கள் தங்குமிடம், அன்னதானம் வழங்கும் இடம் என சபரிமலையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். ஆய்வுகளுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த யாத்திரை பருவமாக இருக்கும் என்றும், மேலும் இந்த ஆண்டு நல்ல அமைதியான புனித யாத்திரையை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
சபரிமலை யாத்திரை துவங்குவதற்கு முன் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். மேலும் உச்சநீதிமன்றம் கூறிய அனைத்து பணிகளும் முடித்து பக்தர்கள் பாதுகாப்பான சபரிமலை யாத்திரை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். பின்னர் பேரிடர் மேலாண்மை துணை ஆட்சியர் டி.ஜி.கோபகுமாரிடம் அவசரகால நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.