உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை - பத்திரமாக மீட்ட வனத்துறை..!
உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தையை, 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையின் உதவியோடும், பாதுகாப்பு உபகரணங்களுடனும் அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது வேலியில் சிக்கி காயமடைந்து சோர்வுடன் காணப்பட்ட சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனகால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.
இதையும் படியுங்கள் : 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி - தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்..!
சிறுத்தையின் காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். குடியிருப்புப் பகுதியை ஒட்டிய நிலத்தில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.