“உருவத்தை பார்த்து நன்றாக பாடுவாரா? என சந்தேகிக்கப்பட்டேன்” - #ushauthup!
பிரபல பாடகி உஷா உதூப் தனது ஆரம்ப கால இசை பயணம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் தனது தோற்றத்தைப் பார்த்து நன்றாக பாடுவாரா என இசையமைப்பாளர்கள் சந்தேகப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
1969-ம் ஆண்டு சென்னை நைட் கிளப்பில் பாடல்களை பாடியதன் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் உஷா உதூப். இவரது பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், டெல்லி நைட் கிளப்பில் பாடத் தொடங்கினார். அங்குதான் உஷாவை ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆக இருந்த தேவ் ஆனந்த் பார்த்துள்ளார். அவரின் திறமையை பார்த்து தான் இயக்கிய ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் 1971 ஆம் ஆண்டு உஷாவை பாட வைத்தார். அதன் மூலம் தான் உஷா பாலிவுட்டின் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
அதன்பின் 1970 மற்றும் 1980களில் டிஸ்கோ சகாப்தத்தில் இசையமைப்பாளர்களான ஆர்டி.பர்மன் மற்றும் பப்பி லஹிரி ஆகியோரின் பல ஹிட் பாடல்களைப் பாடினார். தமிழில் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான மேல்நாட்டு மருமகள், இதயக்கனி, ஊருக்காக உழைப்பவன் ஆகிய படங்களில் பாடல்களை பாடி உள்ளார்.
1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான அஞ்சலி படத்தில் வேகம் வேகம் போகும் நேரம் என்ற ஸ்டைலிஷான பாடலை பாடியிருப்பார். ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை உஷா உதூப் பாடி உள்ளார். மேலும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இவருக்கு இந்திய அரசால் ‘பத்மபூஷன் விருது’ வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய உஷா உதூப், தனது தொடக்க காலத்தில் தோற்றத்தை வைத்து பலரால் சந்தேகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
ஆரம்பத்தில் நாம் பாடும் போது பார்வையாளர்களின் வெளிப்பாடு வேறுமாறி இருந்தது. பின்னர் என் குரலை கேட்டதும் அவர்களின் எண்ணங்கள் மாறியது. இந்த அனுபவம் எனக்கு விடாமுயற்சியின் முக்கியத்துவத்தையும், எனக்கு நானே உண்மையாக இருப்பதற்கும் கற்றுக் கொடுத்தது. எனது இந்த வாழ்க்கை பயணம் மற்றவர்களை ஊக்குவிக்கிறது. குறிப்பாக பெண்களை தங்கள் கனவுகளை தொடரத் தூண்டுகிறது. இதை நான் ஒரு சாதனையாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.