இங்க ஆளே இல்லப்பா.. - போட்டியின் நடுவே வங்கதேச அணியின் ஃபீல்டிங்கை சரிசெய்த #RishabPant வீடியோ வைரல்!
இந்தியா வங்கதேச போட்டியின் இடையே வங்கதேச அணியின் ஃபீல்டிங்கை ரிஷப் பண்ட் சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறியது. சுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 3வது நாளான களமிறங்கிய இந்திய அணி 4விக்கெட்கள் இழந்த நிலையில் 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பார்ட்னர்ஷிப்பில் அசத்திய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் ஆளுக்கொரு பங்குக்கு சதம் விளாசினர். ரிஷப் பண்ட் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்க சுப்மன் கில் 119 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு இலக்காக 515ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரர்கள் ஃபீல்டிங்கை செட் செய்வதில் தடுமாறிக் கொண்டிருந்தனர். சில இடங்களில் வீரர்கள் இல்லாமல் காலியாக இருந்தது. அதைக் கவனித்த ரிஷப் பண்ட் இந்தப் பக்கம் யாரும் இல்லை என அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.