“தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிதித்துறை செயலர் உதயசந்திரன்
"தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” என நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். கிட்டதட்ட 2.07 மணி நேரம் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் உரையாற்றினார். அப்போது பல புதிய திட்டங்களையும், முக்கிய அம்சங்களையும் உரையில் அறிவித்தார். மேலும் நாட்டின் அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பட்ஜெட் தாக்கலின் முக்கிய அம்சம் குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
"தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும். நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும். அந்த வரம்புக்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது.
10ஆவது நிதிக் குழுவில் 6.64சதவீதமாக இருந்த நிதிப் பகிர்வு 15ஆவது நிதிக் குழுவில் 4.08சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. வரி திரட்டுவதற்கான முயற்சிகளை கவனமாக கையாண்டு வருகிறோம். மோட்டார் வாகனம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் திருப்திகரமாக உள்ளது.
இந்த வருடம் 15 சதவீதம் வணிக வரியில் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்காக போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.