#INDvsSA | கடைசி டி20 போட்டி... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தொடரையும் கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3வது போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. இதன்மூலம், தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று (நவ.15) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் 18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 43 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.