#INDvsNZ முதல் டெஸ்ட் | இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் ரச்சனி ரவீந்திரா சதமும், கான்வே 91 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்று 4ம் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது . தொடக்கத்தில் ஆடிய டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்ச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் டெவான் கான்வே 17 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ய்ங் , ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இதனால் நியூசிலாந்து அணி 27.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.