#INDvsNZ முதல் டெஸ்ட் | நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி விளையாடிய இந்திய அணியில் அதிகபட்சமாக தேஜல் 42 ரன்களும், தீப்தி 41 ரன்களும், யாஸ்டிகா 37 ரன்களும், ஜேமிமா 35 ரன்களும், ஷபாலி 33 ரன்களும் எடுத்தனர், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 44.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் அமேலியா கெர் 4 விக்கெட்டுகளும், அவரது சகோதரியான ஜெஸ் கெர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதன்பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 40.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் புரூக் 39 ரன்களும், மேடி கிரீன் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 41 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் வருகிற அக். 27-ம் தேதி நடக்கிறது.