IND vs ENG டி20 போட்டி | அரசு பேருந்துகளில் நாளை இலவச பயணம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஜன.25) இரவு 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இப்போட்டியை காண வரும் பார்வையாளருக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் (TNCA) மா.போ.கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ,கழக பேருந்துகளில் (குளிர்சாதனபேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்கு பின்னர் பேருந்துகளில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், சாதாரண கட்டண பேருந்துகளில் வழக்கம்போல் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அரசினர் தோட்டம் மேட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக இணைப்பு பேருந்துகள் (Shuttle service) மாலை 4.00 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்”
இவ்வாறு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.